வேலூர்:
வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதியான நிலையில், வெற்றியை திசை திருப்பவே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று திமுக பொருளாளரும், எம்எல்ஏவுமான துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில், துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறினார்.
துரைமுருகன் வீட்டில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட் கள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சோதனையிட வந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. துரைமுருகனுக்கு ஆதரவாக பல வழக்கறிஞர்கள், பொதுமக்கள், திமுக தொண்டர்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 3 மணி முதல், காலை 8.30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. அதற்கான படிவங்களில் அதிகாரிகள் கையெழுத்திட்டு
மேலும், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் வேலூர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளிலும் சோதனை நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. சோதனையின்போது எந்தவித ஆவணங்களோ, பரிசுப் பொருட்களோ சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தனது வீட்டில் நடைபெற்ற சோதனை அரசியல் ரீதியிலான பழிவாங்கல் என்றவர், தங்களது வெற்றியை தடுக்க அரசியல் ரீதியிலாக தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, இது தேவை யற்றது, சோதனை மூலம் தங்களது வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
எனது மகனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அதனை சீர்குலைக்க, எதிர்க்கட்சியும், மத்திய அரசும் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள், சோதனை மூலம் எங்களை மிரட்ட முடியாது, அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் கூறினார்.