சென்னை:

டகங்களில் அடிக்கடி விளம்பரம் வெளியாகி வரும் கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு மையங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.  அந்த நிறுவனம் மற்றும் அதைச்சார்ந்த சுமார் 50 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை அளிப்பதாகக் கூறும் கலர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில்  ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். குறிப்பாக சின்னப்பாப்பா, பெரியப் பாப்பா குண்டு நடிகைகள் தாங்கள் ஸ்லிம் ஆகி உள்ளதாக தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து, பொதுமக்களிடையே ஆவலை தூண்டினார்கள்.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் 6 இடங்கள், கோவை, புதுச்சேரி, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் 8 இடங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடங்களில் கடந்த புதன்கிழமை முதல் சோதனை நடைபெற்று வருவதாகவும், ஆனால், இன்றுதான் வெளியே தெரிய வந்துள்ளது.  இந்த கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிருஷ்ணா தேவுலா, அவரது உறவினரும் நடிகையுமான மந்த்ரா ஆகியோராது ஐதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில்   பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் விஜய் கிருஷ்ணா உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.