பெங்களூரு
வருமான வரி விவகாரம் குறித்து வெளியில் பேசக் கூடாது எனப் பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷாவுக்கு அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரும் காஃபிடே நிறுவனருமான வி ஜி சித்தார்த்தா சமீபத்தில் ஆற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் தாம் வருமான வரி விவகாரத்தால் மிகவும் துயரடைந்ததாகவும் அதிகாரிகள் தம்மைக் கடுமையாக மனதளவில் துன்புறுத்தியதாகவும் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையொட்டி வருமான வரித் துறை பல தொழிலதிபர்களிடம் தனது அதிகாரிகள் மூலம் தொலைபேசியில் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் இன்ஃபோசிஸ் இயக்குநரும் பிரபல முதலீட்டாளருமான மோகன்தாஸ் பை இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ”தற்போது வருமான வரி அதிகாரிகள் தொழிலதிபர்களிடம் தொலைப் பேசியில் பேசி வருகின்றனர்.
அப்போது அவர்கள் வருமான வரி விவகாரம் குறித்து வெளியில் பேசக்கூடாது எனக் கூறுகின்றனர். இது போல் எனக்கு மட்டுமின்றி பயோகான் உரிமையாளரான பெண் தொழிலதிபர் கிரண் மசூம்தார் ஷாவுக்கும் இது போல் தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இது போன்ற தொலைப்பேசி அழைப்பு எனக்கு மட்டுமின்றி பலருக்கும் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதை கிரண் ஆமோதித்துள்ளார். இது குறித்து கிரண் மசூம்தார் ஷா, “இது போல எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது உண்மைதான். அதில் பேசிய அதிகாரி என்னிடம் வருமான வரி அதிகாரிகள் தொல்லை அளிப்பதாகவோ அல்லது வேறு எவ்வித விவரமும் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினார். இது போல் மோகன்தாஸ் பை பேசுவதும் தவறு எனவும் இதை ஒரு நண்பராக என்னிடம் தெரிவிப்பதாக அதிகாரி கூறினார்.
எனக்கு அந்த அழைப்பு அறிவுரை போலவும் தோன்றியது மட்டுமின்றி மிரட்டலாகவும் தெரிந்தது. எனக்கும் வருமானவரித்துறைக்கும் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. இது போன்ற அழைப்புக்கள் குறித்து தொழிலதிபர்கள் அமைதி காப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை. நாம் நமது வரியை சரியாகச் செலுத்தும் போது ஏன் இது போன்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து அஞ்ச வேண்டும்?
அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி. நான் எப்போதும் வெளிப்படையாக இவற்றைப் பேசுவேன். ஆனால் மற்ற தொழிலதிபர்கள் பேசாமல் இருப்பது ஏன்?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.