டில்லி

கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராகப் பணி புரிந்து வரும் அசோக் லாவசா கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் பல நடவடிக்கைகளில் விதி மீறல் இருந்ததாகக் கருத்து தெரிவித்தார். ஆயினும் பெரும்பான்மை அடிப்படையில் மற்ற இரு ஆணையர்களின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அப்போது மறுப்பு தெரிவித்தது.

இந்த தகவல்கள் வெளியாகும் என்றால் அசோக் லாவசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதே வேளையில் தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அசோக் லாவசா கலந்துக் கொள்ளத்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் சுஷில் சந்திரா மட்டுமே பல கூட்டங்களில் கலந்துக் கொண்டனர். இது அப்போது சர்ச்சையை உண்டாக்கியது.

அசோக் லாவசாவின் மனைவி நோவல் சிங்கல் பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்த அவர் அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களுக்குத் தனியார் இயக்குநராகப் பதவி வகித்து வந்தார். இவர் தனது சரியான வருமான வரிக்கணக்கை அளிக்கவில்லை என வருமான வரித்துறை நோவலுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அசோக் லாவசா தேர்தல் ஆணையராகப் பதவி வகிக்கும் முன்பு இந்திய அரசு செயலராகப் பணி புரிந்து வந்தார். அவர் அவ்வகையில் நிதித் துறை ஆகியவற்றில் தலைமைச் செயலராகவும் இருந்துள்ளார். எனவே அவர் மனைவி நோவல் தனது கணவரின் பதவியால் ஏதேனும் ஆதாயம் பெற்றிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. எனவே அது குறித்தும் வருமானவரித் துறை விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.