டில்லி

வாட்ஸ் அப் மூலம் வைரஸை பரப்பி ஆர்வலர்களை இஸ்ரேல் உளவு நிறுவனம்  கண்காணித்தது குறித்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என் எஸ் ஓ என்னும் உளவு நிறுவனம் வாட்ஸ் அப் செயலி மூலம் பெகாசஸ் என்னும் வைரஸை பரப்பி இந்திய ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பலரைக் கண்காணித்ததாகச் செய்திகள் வந்தன.   இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் சுமார் 24 பேரிடம் விசாரணை செய்துள்ளது.

தற்போது வாட்ஸ் அப் உரிமையாளர்கள் என் எஸ் ஓ நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.     இந்த வழக்கு மனுவில் சுமார் 1400க்கு மேற்பட்டோரை அந்நிறுவனம் கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இது குறித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களும் தகவல்கள் தெரிவித்தன.

இதன் மூலம் இந்திய ஆர்வலர்கள் பலரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.   இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.