சென்னை: மக்கள் பணத்தில் செயல்படும் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைக்க கூடாது  என தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி,  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்டு 3ந்தேதி  மாலை கும்பிடிப்பூண்டி அரகே உள்ள  ஆரம்பாக்கத்தில் தனது  முதல்கட்ட பயணத்தை தொடங்கிய நிலையில்,  ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்  நிறைவு செய்கிறார்.

இந்த நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதி  தேமுதிக  பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆவடி மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, செதியாளர்களின் அதிரடி கேள்விகளுக்கு பதில்அளித்தார்.  அவர் கூறியதவாது,   “உள்ளம் தேடி இல்லம் நாடி’ முதற்கட்ட பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளோம். ஆவடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம் கன்னியாகுமரி வரை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. எங்கள் கட்சியை நாங்கள் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதனால், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியின் முன்னேற்றத்திற்கான பணிகளை தற்போது செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு நேரடியாக செல்ல உள்ளதால் அதற்கு  5 மாத காலமாகும்.

அதன் பின்னர் வருகிற 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. அதற்குள் கூட்டணி முடிவு செய்யப்பட்டு மாநாட்டில் அறிவிக்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, , “தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான் வெற்றிபெறும். மக்களின் குறைகளை தீர்ப்பது எங்களின் முதல் கடமை. 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் ரூ.100 மட்டுமே வழங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏராளமானோர் வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமைஎன்றார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது, செய்தியாளர் ஒருவர் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர், புகைப்படங்கள் பயன்படுத்து உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் கூறினார்-

 “தமிழகத்தில் அரசின் சார்பில் நடத்தப்படும் அனைத்து திட்டங்கள் மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுவது. இத்தகையை திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுவான பெயர் வைக்க வேண்டும்” என்றார்.

முதலமைச்சரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தீர்களே என்ற  கேள்விக்கு, “நாங்கள் 2019-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். அவர் உடல்நலம் தேறி வந்துள்ளதால் நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன் என்றார். ஆனால்,  நான் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததைப் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் ‘நாங்கள் துரோகம் செய்வதாக’ சொல்வது அர்த்தமற்றது. அவர் என் தோழி தான்” என்றார்.

 நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவிக்காதது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “தற்போது தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். முதலில் அவர் களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். அதன் பிறகு அறிக்கை விடுவது குறித்து கூற முடியும்” என்று பதில் அளித்தார்.

வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை தொடர்பான கேள்விக்கு,   வட இந்தியர்கள் வேலைக்காக இங்கு வந்துள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை அளிக்கப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. அதன் அடிப்படையில் வேலை பார்ப்பதற்கு அனுமதி அளித்தோம். ஆனால், ஓட்டுரிமை வழங்கக் கூடாது. அவர் அவர் மாநிலங்களுக்கு சென்று தங்களது ஓட்டினை செலுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.