பிலிபித்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க உதவும் ஆவணம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடி புகுந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் வாசிகளில் இஸ்லாமியர் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இதை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வன்முறை காரணமாக கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சட்டம் தீர்மானமாகத் தாக்கல் செய்வதற்கு முன்பே உத்தரப்பிரதேச மாநில யோகி அரசு இது குறித்த விவரங்களைத் திரட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவலின்படி இந்த சட்டத்தின் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 32000 முதல் 50000 பேர் வரை பயனடையலாம் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 75% மக்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசு இந்த சட்டம் உருவாகும் முன்னரே எப்படி ஆவணத்தை உருவாக்கியது என்பது குறித்து தகவலில் தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், “இந்த ஆவணம் லக்னோவில் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பயனாளிகளின், பெயர், தந்தை பெயர், இந்தியாவில் வசிப்பிடம், ஆகியவை சேகரிக்கப்படுகிறது. இதற்காக எந்த ஒரு ஆதாரமும் கேட்கப்படுவதில்லை. அத்துடன் அவர்கள் தங்கி இருந்த நாடுகளில் மதம் தொடர்பாக அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இடர்பாடுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மற்றொரு அதிகாரி,”இது வழக்கமான ஒன்றாகும். அகதிகளின் தற்போதைய நிலை குறித்து அறிய இந்தக் கணக்கு எடுக்கப்படுகிறது. இதற்கும் குடியுரிமை சட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.” என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இரு அதிகாரிகளும் அந்த ஆவணம் குறித்த முழு விவரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ளனர்.