கொல்கத்தா: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்வாரா? என்பது விராத் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் அணித்தேர்வர்களின் முடிவு சார்ந்தது என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.
துவக்க வீரராக தற்போது இந்திய அணியில் களமிறங்கிவரும் ராகுல், விக்கெட் கீப்பராகவும் செயல்படுவது அவரின் உடல் நலத்தைப் பாதிக்கும் என்ற குரல்கள் எழுந்துவருகிறது.
இதனால், சரியாக செயல்படாத ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்புக் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.
அவர் கூறியுள்ளதாவது, “ராகுலை விக்கெட் கீப்பராக களமிறக்குவதென்பது கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எடுத்த முடிவு. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ராகுல்.
இவரை, நிரந்தர விக்கெட் கீப்பராக களமிறக்குவது என்று அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் முடிவெடுத்துள்ளனர். பேட்டிங்கைப் போலவே, கீப்பிங் பணியிலும் இவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
வரும் டி-20 உலகக்கோப்பைத் தொடரிலும் இதே முடிவு தொடருமா என்பது குறித்து கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி தேர்வுக்குழு ஆகியோர்தான் முடிவெடுப்பார்கள். அதில் எனது பங்கு எதுவுமில்லை” என்றுள்ளார்.