புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது புரட்சிகர முடிவல்ல என்றும், ஒரு தேவையற்ற அரசியல் முடிவுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி.
அவர் கூறியுள்ளதாவது, “இது ஒரு அரசியல்சார்ந்த முடிவுதான். இது அறிவார்ந்த முடிவல்ல. காஷ்மீர் பிராந்தியத்தில் வாழும் மக்கள், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களைப்போல் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெறுவார்கள்.
சட்டப்பிரிவு 35ஏ என்பது அரசியல் சாசனத்தில் ஒரு பகுதியல்ல. அது ஜனாதிபதியின் உத்தரவின் மூலமே சேர்க்கப்பட்டது. இனி இந்திய அரசின் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீரிலும் செல்லுபடியாகும். நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருப்பதால், காஷ்மீர் தொடர்பான சட்டம் நிறைவேறிவிடும்.
காஷ்மீரில் தற்போது நடப்பவை எனக்கு ஏற்புடையதாக இல்லை. இது மிகவும் தேவையில்லாத மற்றும் மகிழ்ச்சியற்ற ஒன்று. காஷ்மீர் மக்களுக்கு இதன்மூலம் தவறான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டுள்ளன. நான் இதை அங்கீகரிக்க மாட்டேன்” என்றார்.