திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பல கிராமங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருப்பதுடன் இதுவரை 380க்கும் மேற்பட்டோர்களை கொன்று குவித்துள்ளது. குறிப்பாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது மேலும் பல நூறு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மும்படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து சென்ற சமூக சேவகர்களும் மீட்பு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி, ராணுவம் மற்றும் காவல்துறையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மோப்ப நாய்களும் களமிறக்கப்பட்டு உள்ளன. இந்த நாய்கள் இடிபாடுகள் மற்றும் மண்ணில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து கூறுவதால், பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மோப்ப நாய்களான மாயா, மர்பி, ஏஞ்சல் ஆகியவற்றால் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்திய ராணுவத்தில் காடாவர் நாய்களான ஜாக்கி, டிக்ஸி, சாரா ஆகியனவும் சிறப்பாக பணியாற்றுகின்றன. கர்நாடக, தமிழக காவல்படைகளின் நாய்களும் பேரழிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
சேற்றில் புதைந்த சடலங்களை பாதகமான சூழலிலும் இவற்றால் நுகர முடிவது பாராட்டுக்குரியது என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்துச் செல்லப்பட்டனா். மண்ணில் புதையுண்டவா்களையும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை கண்டறிவதற்கான கூடுதல் வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா். சாலியாற்றில் 40 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் பணிகள் தொடா்ந்து வருவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.