நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரியங்கா இவ்வாறு பேசினார்.

‘வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஒரு அரசாங்கத்தை அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிக்கிறது’ என்று கூறிய பிரியங்கா காந்தி, ‘மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்று குற்றம் சாட்டினார்.

‘எனது சகோதரர் ராகுல் காந்தி ஹரியானா வாக்கு திருட்டு குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். வட இந்தியாவில் பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பரவலான முறைகேடுகள் நடந்துள்ளன,’ என்று ராகுல் காந்தி வெளியிட்ட H பைல்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

“தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்தையும் அழித்து வருகிறது. எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.

20 ஆண்டுகளாக, உங்கள் குரல் அடக்கப்பட்டது, உங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன… இப்போது தேர்தல்கள் வந்துவிட்டதால், இந்த அரசாங்கம் 10,000 ரூபாயைக் கொடுத்து உங்கள் வாக்குகளை வாங்க முயற்சிக்கிறது!

ஆனால் பீகார் பெண்கள் இப்போது விழித்திருக்கிறார்கள்… அவர்கள் இனி அமைதியாக இருக்க மாட்டார்கள், பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள்!!

பாசிச ஆட்சியாளர்களை அகற்றவேண்டியது நமது கடமை” என்று பேசினார்.

‘பீகார் சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ரூ. 25 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், ‘ஒரு ஏழைக் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஒரு வேலையாவது வழங்க முயற்சிப்போம். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவோம்’ என்று அவர் உறுதியளித்தார்.