ஃப்ளோரிடா: உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.
அவர் கூறியுள்ளதாவது, “அந்த தோல்வி ஏற்பட்ட பிறகு, ஒவ்வொரு நாள் காலையில் விடியும்போதும் அந்த நினைப்பு வந்து வாட்டும். ஆனால், அதையும் தாண்டி அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தினந்தோறும் உலகக்கோப்பை நினைப்பு வந்து பிரச்சினை செய்தாலும், அந்தந்த நாளின் பணிகளை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாங்கள் தொழில்முறையிலான நபர்கள். எனவே, நாங்கள் முன்னோக்கி சென்றே ஆக வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு அணிக்குமே அந்த நிலைதான்.
எனவே, உலகக்கோப்பையில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். மேற்கிந்திய அணியுடனான டி-20 தொடரையொட்டி நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அந்த சூழல் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தோல்வியிலிருந்து மீண்டுவந்து, அணியின் ஒரு பகுதியாகவும், தொடர்ந்த இயக்கத்திலும் இருக்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது” என்றார்.