நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செலவுகளை குறைக்கும் விதமாக ஐடி நிறுவனங்களில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது. முன்னதாக காக்னிசண்ட் நிறுவனம் ஏழாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் இதே பாணியை பின்பற்றுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர் பதவிகளில் உள்ள சுமார் 2,200 பேரும், மத்திய நிலைப் பதவிகளில் உள்ள சுமார் 4000-10000 பேரும் தங்களது வேலையை இழக்க உள்ளனர். மேலும், தலைமை அதிகாரிகள் 50 பேர் வரையில் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கேப்ஜெமினி எனும் மற்றொரு ஐடி நிறுவனமும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஐடி நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே நிகழும் இந்த தொடர் பணி நீக்கத்தால் அத்துறையில் பணிபுரிவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க வழிவகுக்கும் முடிவுகளின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்களின் ஒன்றியம் (யுனைட்) மற்றும் கர்நாடக மாநில ஐ.டி / ஐ.டி.எஸ் ஊழியர் சங்கம் (கி.ஐ.டி.யு) இந்த நடவடிக்கையை எதித்துள்ளதோடு, இவை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதில் தலையிடவும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.டி ஊழியர்களின் ஒன்றியம், “ஐ.டி மேஜர்களின் இந்த செயல் நிலச்சட்டத்திற்கு எதிரானதோடு, சட்ட விரோதமானதும் கூட. ஆனால் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இந்த நடைமுறைகளில் அலட்சியமாக உள்ளன. இதுபோன்று பணியாளர்களை பணி நீக்கம் செய்வது ஐ.டி நிறுவனங்களின் அன்றாட விவகாரமாக மாறியுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றன. கடந்த 5ம் தேதி எங்களின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இந்த சட்ட விரோத விவகாரத்தில் அவர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

இன்போசிஸ் மற்றும் காக்னிசன்ட் ஆகிய நிறுவனத்தின் நிர்வாகம் எடுத்த சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற முடிவை வன்மையாக கண்டிப்பதாக கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர் சட்டங்களின் படி, 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்துள்ள நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வதற்கு தொழிலாளர் துறையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஊழியர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு, தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாக அதை மாற்றி கூறுவது என்பது சட்டத்திற்கு எதிரானது. பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் நிறுவனம் அவ்வாறு கேட்டால், ராஜினாமா செய்ய மறுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.