டில்லி
வருமான வரித்துறை பினாமி பரிவர்த்தனைகளுக்கு புதிய சட்டத்தின் படி 7 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
பெரிய செல்வந்தர்கள் தங்களது சொத்துக்களை மற்றொருவர் பெயரில் வாங்குவதும் ஆனால் அதை வாங்கியவர்களே அனுபவிப்பதும் பினாமி பரிவர்த்தனை என அழைக்கப் படுகிறது. வருமான வரியிலிருந்து தப்பிக்க வரி செலுத்தாத பணத்தைக் கொண்டு வாங்கப் படும் சொத்துக்கள் இது போல பினாமி பரிவர்த்தனை மூலம் வாங்கப் படுகின்றன. இதனால் வருமான வரித்துறைக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.
இந்த பினாமி முறைக்கு எதிரான சட்டங்கள் தற்போது கடுமையாக்கப் பட்டுள்ளன. பினாமி பரிவர்த்தானைகளில் ஈடு படுவோரை எச்சரித்து வருமான வரித்துறை செய்தித் தாள்களில் அறிவிப்பு செய்துள்ளது. சில பத்திரிகைககளில் இது விளம்பரமாகவும் வருமான வரித்துறையால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தின் தலைப்பில் “பினாமி பரிவர்த்தனையில் இருந்து விலகி இருங்கள்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன் ”கருப்புப் பணம் என்பது மனித இனத்துக்கு எதிரான குற்றம்” எனவும் ”அதை ஒழிக்க குடிமக்கள் அரசுக்கு உதவ வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், “பினாமிதாரர்கள் ( இவர்கள் பெயரில் சொத்து வாங்கப்பட்டிருக்கும்) மற்றும் பயணாளிகள் (சொத்து வாங்கியவர்கள்) ஆகிய இருவருமே குற்றவாளிகள் எனக் கருதப் படுவார்கள். இவ்வாறு பினாமி பரிவர்த்தனையில் ஈடு படுபவர்களுக்கு 7 வருடம் வரை சிறை தண்டனையும், பினாமி சொத்துக்களின் மதிப்பில் 25% அபராதமும் விதிக்கப்படும்.” என அறிவித்துள்ளது.
கடந்த 2016 வரை இருந்த பினாமி ஒழிப்பு சட்டத்தின் படி அதிகபட்சமாக 5 வருடம் சிறை தண்டனையும் சொத்துக்களின் மதிப்பில் 10% அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 1 ஆம் தேதி திருத்தப்பட்ட இந்த சட்டத்தின் படி அதிகபட்சமாக 7 வருடம் சிறை தண்டனையுடன் சொத்துக்களின் மதிப்பில் 25% அபராதம் என தண்டனைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.