டில்லி:
கருப்பு பணம் மற்றும் முறைகேடாக சம்பாதித்துள்ளவர்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தார் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை பலமடங்கு உயர்த்தி வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தருபவர்களுக்கு வழங்கப்படும் சன்மானம் ரூ.50 லட்சமாகவும், வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளித்தால் 5 கோடி ரூபாய் வரை பரிசாகப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. இந்த பரிசு திட்டம் இந்த வாரம் முதல் அமலுக்கு வருவதாகவும், கருப்புப் பணச் சட்டம் 2015-ன் கீழ் மேலும் பல மடங்கு பரிசு தொகையினைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு முதல் கருப்புப் பணம் குறித்துத் தகவல் அளிப்பவர்களுக்கு, அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் திட்டம் செயல்பட்டு வருகிறது. பின்னர் அது ரூ.15 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.
தற்போது அறிவித்துள்ள புதிய திட்டத்தின்படி, கருப்பு பணம் ஒருவர் தகவல் அளித்தால், அதன் பேரில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்ப, உதாரணமாக, ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டால், அதில் இருந்து குறைந்த பட்சம் 5 சதவீதம் முதல் படிப்படியாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசு பெற முடியும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்து ஆதாரப்பூர்வமான உண்மை தகவல் தெரிவிப்பவர் களுக்கு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் தொகையில் இருந்து 3 சதவீதம் முதல் 50 லட்சம் வரை பரிசாகப் பெற முடியும் என்றும், இறுதியாக 10 சதவீதம் வரித் தொகை என 5 கோடி ரூபாய் வரை பரிசு தொகை பெறலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு இந்தப் புதிய திட்டங்களின் மூலமாகக் கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்து அதிகளவில் புகார்கள் பெறலாம் என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கருப்பு பணம் மற்றும், பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளிக்க விரும்புபவர்கள் blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கும் வெளிநாட்டவர்களும், வெகுமதிக்கு தகுதியுடையவர்கள் என்றும், தகவல் கொடுக்கும் நபர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படாது, கண்டிப்பாக ரகசியமாக பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.