புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனியார்மயமாக்கப்படாது என்று கூறியுள்ளார் அந்த அமைப்பின் தலைவர் சிவன்.
ஒரு வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் பேசியதாவது, “விண்வெளித்துறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என்பதாக தவறான தகவல்கள் மக்களிடையே பரவுகின்றன. விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், இஸ்ரோவை தனியார்மயமாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
தனிநபர்கள், விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டுமே சீர்திருத்தங்களின் முழு செயல்பாடும் உதவும். இல்லாவிட்டால், அவை இஸ்ரோவால் மேற்கொள்ளப்படும்.
விண்வெளி துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த வரைவு மசோதா கிட்டத்தட்ட இறுதியாகியுள்ளது. அது விரைவில் மத்திய அமைச்சரவை முன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார் சிவன்.