காஸா:

காஸா பகுதியில் இஸ்ரேல்   ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இவர்கள்  ஜெருசலேம் நகரையும்  இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில், தங்களின் சொந்த வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த நான்கு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், தடுப்பு வேலியை மீறி  இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதை தடுக்கும் விதத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கி சூட்டில் 729 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக வும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்களில் 305 பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 166 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது