ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார்.
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் போது உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஏமன் விமான நிலையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அவருடன் சென்ற குழு உறுப்பினர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
வியாழன் அன்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பொதுமக்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ஏமன் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டபோது நான் அங்கு இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம், இரண்டு மின் நிலையங்கள், மேலும் துறைமுகங்கள் ஆகியவற்றைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹவுதிகளை அழிக்க இஸ்ரேல் தனது தாக்குதலை “இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.