டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக ‘ஃபுளுரோனா’ என்ற காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறயிப்பட்டுள்ளது. இது உலக மருத்துவ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஃபுளு காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஒரு மனிதருக்கு ஏற்படுவதைத்தான் ஃபுளுரோனா என்று மருத்துவ நிபுணர்கள் அழைக்கின்றனர்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் கடந்த இரு ஆண்டுகளாக உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வைரஸ் அவ்வப்போது, உருமாறிய நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி மக்களை மிரட்டி வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் நாட்டில் ‘ஃபுளுரோனா’ என்ற புதிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள், அது ஃபுளுரோனா என்ற தெரிவித்து உள்ளனர்.
அதாவது, ஃபுளு காய்ச்சல் உடன் கொரோனா தொற்றும் இணைந்து காணப்பட்டால், அந்த நோய் ஃபுளுரோனா என்று அழைக்கப்படுகிறது. அந்த கர்ப்பணி பெண் இரு நோய்த்தொற்றுகளாலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண், இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது பிரசவத்தை நினைவில் கொண்டு, மருத்துவமனை நிர்வாகம் சிறப்பான சிகிச்சை அளித்ததாகவும், அதன் காரணமாக அவர் நோயில் இருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் (ஃபுளுரோனா) பாதிக்கப்பட்டவர்கள், உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், கண் வலி போன்றவற்றால் அவதிப்படுவதாகவும், குறைந்த பட்சம் 10 நாட்கள் வரை காய்ச்சல் தொடர்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஃபுளுரோனா குறித்து தகவல் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம், இந்த கேஸை ஆராய்ந்து வருவதாகவும், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர் களுக்கும் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவின் இயக்குனர் பேராசிரியர் அர்னான் விஜ்னிட்சர், கர்ப்பிணிப் பெண்களுக்கோ அல்லது பிரசவத்தில் இருக்கும் பெண்களுக்கோ இதுபோன்ற காய்ச்சல் நிகழ்வுகளை நாங்கள் காணவில்லை. இன்று கோவிட் மற்றும் காய்ச்சல் இரண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை அதிகமாகப் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
அதுபோல, ரோமில் உள்ள ஜெமெல்லியின் தொற்று நோய் நிபுணரான ராபர்டோ கவுடா, இந்த வழக்கு சற்று விசித்திரமானது “ஏனென்றால் மருத்துவத்தில் எப்பொழுதும் கூறப்படுவது ஒரு நோய்க்கு காரணமான வைரஸ் இருந்தால், அது மற்றொரு நோயின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆனால், கோவிட் வைரஸ். இன்டர்ஃபெரான் உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் இது மற்ற வைரஸுஸ் தாக்குதலுக்கான வழியைத் திறக்கும் வகையில் உள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த காய்ச்சல் (ஃபுளு) பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா கொடுமையே பெருங்கொடுமையாக உள்ள நிலையில், தற்போது ஃபுளு காய்ச்சலும் சேர்ந்து கொண்டுஇ ஃபுளுரோனா என்ற பெயரில் உலக மக்களை மிரட்டத் தொடங்கி உள்ளது. இதே நிலைமை நீடித்தால், உலக மக்களின் எதிர்காலம் என்னவாரும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.