ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணுஆயுத கிடங்குகளை குறிவைக்கக் கூடாது என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு ஈரானின் எண்ணெய் வளத்தை சார்ந்துள்ள நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனால் பெரும் பொருளாதார சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருக்கும் நாடுகளை அச்சுறுத்தும் விதமாக இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இருக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அதேவேளையில், அமெரிக்க தேர்தலின் முடிவைப் பொறுத்தே இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுபடும் என்றும் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் இருவரில் யார் அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும் மக்களுக்கு நன்மை ஏற்படப்போவதில்லை என்றும் வாடிகன் முதல் வாஷிங்டன் வரை பேசப்படுகிறது.
இதனிடையே ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது.
மேலும், ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல் இன்றோ நாளையோ ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் தற்போது வரை ஈரானின் அணுஆயுதங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.