ஹமாஸுக்கு எதிரான போரை கடந்த மாதம் மீண்டும் தொடங்கிய இஸ்ரேல், காசா பகுதியின் 50% க்கும் அதிகமான நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
இதையடுத்து ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் தினம் தினம் நசுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
காசா எல்லையைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்ரேல் ராணுவம் அங்குள்ள பாலஸ்தீனர்களின் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வாழ முடியாத அளவுக்கு இடித்துள்ளது என்று இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
காசா நிலப்பகுதியை கைப்பற்றியிருப்பது, 2023 அக்டோபரில் போர் தொடங்கியபோது பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான தற்காலிகத் தேவையாக இஸ்ரேல் சித்தரித்துள்ளது.
இருந்தபோதும், காசாவின் வடக்கு மற்றும் தெற்கைப் பிரிக்கும் ஒரு சிறிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, நீண்டகால கட்டுப்பாட்டைப் பயன்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் காசா நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம், ஹமாஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகும், காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் என்றும், பாலஸ்தீனியர்களை வெளியேறத் தள்ளும் என்றும் கூறியது இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் காசா மீதான திட்டமிட்ட தாக்குதலை துவங்குவதற்கு முன் இருந்ததை விட காசாவின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடு தற்போது இன்னும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதை அடுத்து குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.