அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்திய ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருவதுடன் இந்த தாக்குதலை லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீதும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் தெற்கு காசா பகுதியில் நேற்று (அக். 16) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலை அடுத்து சின்வார் தப்பிச் செல்லமுடியாமல் சிக்கியதாகவும் அவரை ராணுவத்தினர் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலை அடையாளம் கண்ட ராணுவத்தினர் இன்று அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.