ஜெருசலேம்: தற்போது உலகை அதகளப்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க, இஸ்ரேல் ஆராய்ச்சி நிறுவனம் ஐஐபிஆர் (IIBR) பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் கூறியதாவது, “கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஐஐபிஆர் பணியாளர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். உயிரியல் ஆய்வு நிறுவனத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுடன் கொரோனா தடுப்பு மருந்து குறித்து விவரங்களை கேட்டறிந்தேன்.
மருந்துக்கு காப்புரிமை பெறுவதிலும், வர்த்தகத்திற்காக மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கையிலும் ஆய்வு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கொரோனா ஒழிப்பில் இது முக்கிய திருப்புமுனையாக இருக்கப்போகிறது” என்றார் அவர்.
மருந்தைப் பரிசோதிக்க, விலங்குகள் பயன்படுத்தப்பட்டதா அல்லது மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் நாட்டிலிருந்து இப்படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளதால், இது நம்பத்தகுந்ததாகவே இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் பல வல்லுநர்கள்.