பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனையடுத்து பிணைக்கைதிகளை இருதரப்பினரும் விடுவித்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியதாகக் கூறி அதனுடன் ஹமாஸ் ஒத்துழைக்க மறுத்ததுடன் எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்தது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸ் மற்றும் காசா மக்கள் நரகவெறி தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிணைக்கைதிகள் குறித்த கவலையின்றி போர்நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாகவும் ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளையில், தனது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.