டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவின் கிழக்கு டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஐ.எஸ். உடன் தொடர்புடைய தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்கதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிரியாவில், அசாத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சிரியாவில் உள்ள பல சிறுபான்மையினரில் ஒருவரான கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்.
கிழக்கு டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கச் செய்ததாக சிரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிரியாவில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறையைக் கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், நாட்டின் மதவெறி துயரங்களை அதிகரிக்கும் ஒரு கொடிய தாக்குதல் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகரின் ட்வீலா மாவட்டத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 63 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் அரசு செய்தி நிறுவனமான சானாவிடம் தெரிவித்துள்ளது.

குண்டு வைத்த நபர், ஐஸ்ஐஎஸ் அமைப்பை சேர்நத்வர் என்றும், வெடிகுண்டு உடையை அணிந்திருந்து தாக்குதல் நடத்தியதாகவும், முதலில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக உள்துறை அமைச்சகம் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான, புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், தேவாலயத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இடிபாடுகள் மற்றும் இரத்தக் கறைகளால் மூடப்பட்டிருந்த அழிக்கப்பட்ட பீடங்களைக் காட்டுகின்றன.
இதுகுறித்து, சிரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் கெய்ர் பெடர்சன், “முழு விசாரணை மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு” அழைப்பு விடுத்தார் மேலும் உரியா உள்துறை அமைச்சர் அனஸ் கட்டாப், இந்த கொடூர செயல் குறித்து, விசாரணைகள் நடந்து வருவதாக சானாவிடம் கூறியதுடன், சேதமடைந்துள்ள தேவாலயம் மீட்டெடுக்கப்படும் என்று கூறினார்.