புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ரியாஸ் அபூபக்கருடன் தொடர்பு வைத்திருந்ததால், கத்தாரில் கைது செய்யப்பட்ட கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ஃபைசல், விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் இருக்கும் அபூபக்கரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விஷயம் கண்டறியப்பட்டு, ஃபைசல் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த அபூபக்கர் கடந்த வாரம் கேரள மாநிலம் பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார். இவர், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டப்படும் ஸஹ்ரான் பின் ஹஷிமின் பேச்சுகளால் கவரப்பட்டு, கேரள சுற்றுலா தளங்களின் மீது அப்படியானதொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டவர் என்று என்ஐஏ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கத்தாரிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஃபைசல், கேரளாவின் காசர்கோட் ஐஎஸ்ஐஎஸ் தொகுதியின் தலைவர் அப்துல் ரஷித் அப்துல்லாவுடனும் தொடர்பில் இருந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.