சென்னை:  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என திமுக அரசை   தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில்,  அதற்கு அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை கலைஞர் அரசு மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், யார் அந்த சார் என்று அதிமுகவினர் நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர்,  அ.தி.மு.க. போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப் பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள்.  கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம். பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில்,  இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

இந்த விஷயத்தில்,  அ.தி.மு.க. போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம்.  மக்களிடையே நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் இப்படி கபட நாடகத்தை நாடுகிறார்கள் என்று கூறினார்.

வழக்கை சிபிஐ மாற்ற எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,  அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

நடிகர் விஜய்,  தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே என்றும்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை  என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றவர்,   பெண்கள் வெளியே வருகிறார்கள்.  மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார். அது இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது என்று விளக்கம் அளித்ததுடன்,

 தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும் என சாடினார்.‘ நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம். தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள் என்று கூறியதுடன்,   எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று நினைப்பதை போல, எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் அண்ணாமலை உள்ளார்.

இவ்வாறு  கூறினார்.