திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த பொது நல வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் பிஆர் காவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் அடங்கிய பெஞ்ச் முன் இன்று நடைபெற்றது.

ஆந்திர மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இருந்து பதில் கிடைக்காத நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை வெகுவாக கண்டித்தனர்.

 

திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்த முறையான ஆதாரமும் இல்லாமல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் குற்றச்சாட்டு வைத்தது தேவையில்லாத ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு அவர்களின் விசாரணை முடிவு வரும்வரை காத்திருக்காமல் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்தது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையே போதுமானதா என்பது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக்டோபர் 3ம் தேதி) ஒத்திவைத்தனர்.