தராபாத்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனையின் டிவிட்டர் பதிவால் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சிந்து இந்தியாவின் வெள்ளி மங்கை எனப் புகழப்படுபவர் ஆவார்.  தற்போது 25 வயதாகும் இவர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.   அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் ”டென்மார்க் ஒப்பன் போட்டி எனது இறுதிப்போட்டி.  நான் ஓய்வு பெறுகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.  அதையொட்டி இந்த பரபரப்பு உண்டானது. ரசிகர்கள் பலரும் இதற்கு கடும் வருத்தம் தெரிவித்தனர்.  அதையொட்டி அவர் தாம் ஓய்வு பெறப்போவதில்லை என்னும் பொருள் பட இரு பதிவுகள் இட்டுள்ளார்.

தனது முதல் பதிவில் சிந்து, “இப்போது சிறிது காலமாக என் உணர்வுகள் மாறி வருவதைப் பற்றி யோசித்து வருகிறேன். அவற்றை சமாளிக்க சிரமப்பட்டேன் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அது மிகவும் தவறான புரிதலைக் கொடுப்பதாகவும் உணர்கிறேன். அதனால்தான் இந்த நீண்ட பதிவை பதிவிடுகிறேன். இதைப் படித்து முடிக்கும் போது எனது பார்வையைப் பற்றி நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள், அதை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனப் பதிந்துள்ளார்.

அடுத்த பதிவில் “இந்த தொற்று எனக்கு ஒரு புதிய கோணத்தை கொடுத்திருக்கிறது. விளையாட்டின் இறுதி ஷாட் வரை எதிரிகளின் கடினமான ஆக்ரோஷமான தாக்குதல்களை எதிர்த்துப் போராட நான் கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். நான் இதற்கு முன்பும் அவ்வாறு செய்திருக்கிறேன், மீண்டும் செய்ய முடியும். ஆனால் எப்படி உலகம் முழுவதையும் சரிசெய்ய முடியும்? இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸை நான் தோற்கடிக்க முடியுமா?

நாம் வீட்டிலேயே பல மாதங்களாக இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் வெளியே செல்லும்போது நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறேன், அதோடு, இதயங்களை உடைக்கும் கதைகளை ஆன்லைனில் படிக்கும்போது மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. என்னைப் பற்றியும், நாம் வாழும் இந்த உலகத்தைப் பற்றியும் நிறைய யோசிக்கிறேன். டென்மார்க் ஓபனில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் செய்தி பலருக்கு ஹார்ட் அட்டாக் அளித்திருக்கும் என கூறி உள்ளார்.  மேலும் தாம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தமக்கு ஆதரவு கோரி இந்த பதிவை இட்டதாகவும் தெரிவித்துள்ளார்.   அத்துடன் தாம் அமைதியின்மை, வருத்தமான உணர்வு, அர்த்தமற்ற அச்சம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றில் இருந்து மட்டுமே ஓய்வு பெறப்போவதாகப் பதிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.