டில்லி

கொரோனா பாதித்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் குணம் அடைந்தாரா என்பது குறித்த விவரம் இதோ

உலக மக்களைப் பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 410 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  பல உலகப் பிரபலங்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.   அதில் பிரிட்டன் பட்டத்து இளவரசரான சார்லஸ் ஒருவர் ஆவார்.  அரசி எலிசபெத்துக்குப் பிறகு அரசராகும் வரிசையில் இவர் முதலில் உள்ளார்.   இவர் தற்போது முழு குணம் அடைந்துள்ளார்.

சென்ற வியாழன் அன்று கோவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவின் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கலந்துக்கொண்டர்.  அப்போது அவர், “இளவரசர் சார்லஸுக்குப் பெங்களூருவில் நடந்து வரும் சௌக்கியா ஆயுர்வேத ரிசார்ட் நிர்வாகி மருத்துவர்  ஐசக் மத்தாய் சிகிச்சை அளித்துள்ளார்.  சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணம் அடைந்துள்ளதாக மருத்துவர் எனக்கு தொலைபேசி மூலம்  தெரிவித்தார்

பிரதமர் மோடி இளவரசர் சார்லஸுடன் பேசிய போது அவர் ஆயுர்வேதத்தின் மீது ஆர்வம் காட்டியதற்கு  நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் யோகாவை கற்பிப்பது குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்கள் குறித்து மோடி இளவரசுக்கு விளக்கம் அளித்தார். அமது முன்னோர்கள் காட்டிய வழி முறைகள் மூலம் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும் என்பது குறித்து மோடி தெரிவித்தற்கு இளவரசர் பாராட்டு தெரிவித்துள்ளார்”  எனக் கூறினார்.

ஆனால் லண்டனில் உள்ள இளவரசரின் செய்தி தொடர்பாளர், “ஆயுர்வேதம் மூலம் இளவரசர் சார்லஸ் குணமடைந்ததாக வந்த தகவல் தவறானது.   அவர் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை அளித்த மருத்துவ ஆலோசனையை மட்டுமே பின்பற்றினார்.  அதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை” என அமைச்சரின் பேச்சை மறுத்துள்ளார்.