கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுமாறு செளரவ் கங்குலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் நோயில் வீழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார் மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் அஷோக் பட்டாச்சார்யா.
பிசிசிஐ தலைவரும், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவருமான கங்குலி, தற்போது மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு இருதயப் பிரச்சினை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவரை மருத்துவமனையில் சந்தித்துப் பேசிய அஷோக் பட்டாச்சார்யா கூறியுள்ளதாவது, “கங்குலியை அரசியலில் ஈடுபட வேண்டுமெனக் கூறி, சிலர் அவருக்கு அதிகமான அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல்ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
இது கங்குலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். கங்குலி அரசியலில் ஈடுபடுபவர் அல்ல. கங்குலியை விளையாட்டு வீரராகத்தான் அறிவார்கள். அவர் அவ்வாறுதான் அறியப்பட வேண்டும்.
கங்குலியை அரசியலில் சேரக்கூறி அழுத்தம் கொடுக்கக்கூடாது. கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசியபோதுகூட, நான் அவரிடம், அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்றுள்ளார். அஷோக் பட்டாச்சார்யா கங்குலிக்கு நெருங்கியவர்.
கங்குலி, மாநில அரசியலுக்கு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக, நீண்ட நாட்களாக செய்திகள் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.