கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இவர் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பக்சேக்களின் குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இலங்கையில் அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் 10 பேர் உள்ளனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ராஜபக்சே பதவியைவிட்டு விலக மறுத்து வந்ததால், இந்த போராட்டம் நேற்று (மே 5ந்தேதி) வன்முறையாக மாறியது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகை அதிகாரபூர்வ அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், ராஜபக்சே கட்சி எம்.பி. ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் பல இடங்களில் நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும், பிரதமரின் இல்லத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை ராணுவம் அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மகிந்த ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால், ராஜபக்சே குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக 5 விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்களும், 8 பைலட்களும் தயாராக இருப்பதாகவும், இலங்கை பொதுமக்களின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்ச சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல தயாராக உள்ளனர் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைகாரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அரசியல் கட்சி வேறுபாடின்றி உடனடியாக கைது செய்யுமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். மேலும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளு மாறும் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.