டில்லி
செயற்கைக் கோளை உபயோகிக்க பாஜக ஆரம்பித்துள்ள நமோ டிவி சட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறப்படுகிறது.
பாஜகவினால் ஆரம்பிக்கப் பட்டதாக கூறப்படும் நமோ டிவி பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பயண விவரங்களையும் அவரது பிரசாரங்களையும் ஒளிபரப்பி வருகிறது. இந்த டிவி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் உலகில் கடும் சர்ச்சை எழுந்துள்ள்து. நமோ டிவி தொடக்கத்தின் மூலம் பாஜக பல விதி மீறல்களை செய்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்ரனர்.
தேர்தல் நேரத்தில் இந்த நமோ டிவி தொடங்கப் பட்டுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பரிசோதனை செய்து வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் மேலும் எந்த விவரமும் ஆணையம் அறிவிக்கவில்லை.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ”நமோ டிவி என்பது விளம்பரத்துக்கான சிறப்பு சேவை ஆகும். இந்த சேவை டிஷ் டிவி, டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் ஆகிய டிடிஎச் சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பாஜக சார்பில் ஒளிபரப்பி வருகின்றன. எனவே இதற்கு அதிகார பூர்வ ஒப்புதல் எதுவும் தேவையில்லை” என அறிவித்துள்ளது.
இதன் மூலம் நமோ டிவி அனுமதி கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடன் எவ்வித விண்ணப்பமும் அளிக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. அதனால் நமோ டிவி தனது ஒளிபரப்பு குறித்து எவ்வித ஆவணமும் அளிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் மற்ற 900 டிவி சேனல்களைப் போல் இந்த டிவி பயன்படுத்தும் செயற்கைக் கோள் மற்றும் அதன் லின்க் விவரங்களும் அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
முதலில் டாடா ஸ்கை நிறுவனம் நமோ டிவியை ஒரு இந்தி செய்தி சென்னல் என தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தது. அதன் பிறகு அதை சிறப்பு சேவை என மாற்றி உள்ளது. ஆனால் டிடிஎச் மூலம் ஒளிபரப்பப் படுவதால் இந்த நமோ தொலைக்காட்சி செயற்கைக் கோளை பயன்படுத்துவது நிரூபணம் ஆகி உள்ளது.
இந்திய சட்டப்ப்படி தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெறாமல் செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பு செய்யக்கூடாது. இந்த ஒப்புதலை பெற பல பாதுகாப்பு சோதனைகள் நடைமுறையில் உள்ளன. கேபிள் மூலம் ஒளிபரப்ப்படும் உள்ளூர் சேனல்களுக்கு அரசு பல சோதனை விதிமுறைகள் வைத்துள்ளன. அப்படி இருக்க நமோ டிவி எவ்வித உரிமமும் இன்றி செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பு செய்வதாக சந்தேகம் கிளம்பி உள்ளது.