சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள்..அதை இந்திய அரசியல் வரலாறு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் நிலைக்கு வந்துள்ளதோ என்றே தோன்றுகிறது மோடியின் ஆட்சியை பார்க்கும்போது..

எழுதிவைத்த உரைகளை உப்புசப்பில்லாமல படிக்கும் பிரதமர்களை பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு, செங்கோட்டையில் உணர்ச்சிகரமாய் சுதந்திரதின உரையை முதன் முதலாய் ஆற்றிய மோடியை பார்த்தபோது ஒரு விதமான நம்பிக்கை எழாமல் போகவேயில்லை..

எதையெதையோ செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்,  60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சரிசெய்ய சில ஆண்டுகள் போதுமா என்று கேட்க ஆரம்பித்தபோதுதான் பொறி தட்ட ஆரம்பித்தது..

காந்தி, இந்திரா போன்றவர்களின் பிறந்த நாளின் முக்கியத்துவம் குறைக்கும் வகையில் சுவச்சா பாரத், கக்கா பாரத் என அழித்தொழிப்புவேலைகள்தான் ஆரம்பித்தன. இதைவிடக்காமெடி, காங்கிரசின் திட்டங்களை அப்படியே மொழிமாற்றம் செய்து பளபளப்பு காட்டியதுதான்.

நேஷனல் மனுபேக்சரிங் பாலிசியை மேக் இன் இண்டியா என்று பெயிண்ட் அடித்தார்கள். ஈ.- கவர்னன்ஸ் என்பதை டிஜிட்டல் இந்தியா என்று ஒளிரவிட்டார்கள்.. இரண்டு ஆண்டுகளில் வெறும் பேச்சு மட்டுமே இப்படி ஒலித்தபடியே இருந்ததை அடுக்கிக்கொண்டே போகலாம்.

திடீரென்று கடந்த ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு 500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் மோடி., கருப்பு பணத்தை ஒழித்தே தீருவேன் என கர்ஜித்தார். நாடு அதிர்ந்தபோது, இரண்டே நாட்களில் ஏடிஎம் பேங்குகள் புதிய கரன்சியால் நிரப்பப்பட்டுவிடும் என்றார். மக்களும், ஏதோ நல்லது நடந்தால் சரி என்று பொறுமை காத்தார்கள்..

சொந்த பணத்தை மாற்றி இரண்டாயிரத்தாளை கையில் வாங்குவதற்காக பைத்தியக்காரர்களாய், தெருநாயினைவிட கேவலமாக அலையவிடப்போகிறோம் என்பதை மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஆளுக்கு நாலாயிரம் மட்டுமே…அதற்கும் கையில் மை வைப்போம், வாரத்திற்கு, மாதத்திற்கு இவ்வளவு மட்டுமே எடுக்கமுடியும்.. கல்யாண செலவுக்கு இரண்டரை லட்சம் மட்டுமே எடுக்க அனுமதி.. ஒன்றா இரண்டா நடந்தேறிய கொடுமைகள்..

பிரதமர் மோடி புண்ணியத்தில், தங்களின் சொந்த பணத்தை எடுக்கமுடியாமல் 150க்கும்மேற்பட்டோர் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல் நெரிசலில் சிக்கி பலியான புதிய வரலாற்றை 2016 ஆண்டு இந்தியா கண்டது.

இன்னொரு பக்கம் சிறு குறு தொழில்கள், சிறிய வியாபாரம் போன்றவற்றை நம்பியிருந்த கோடிக்கணக்கானோர் பணச்சுழற்சி இல்லாததால் நடுத்தெருவுக்கு வந்தனர்.

புதிய கரன்சிகள் அச்சடிப்பு, விநியோகம் போன்றவற்றில் திட்டமிடாமல் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மோடி அறிவித்திருக்கிறார் என்பது பின்னர்தான் புரியவந்தது.

 

அவரசஅவரசமாய் அடிக்கப்பட்ட புதிய நோட்டுக்களை உள்ளே ஏற்றுவதற்கு வெறும் இரண்டரை லட்சம் ஏஎடிம் மிசின்களை மாற்றியமைக்கவே இவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை பிடித்தது.

பல மாதம் கழித்து ரிசர்வ் வங்கி சொன்னது. சுமார் பதினைந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகளில் சில ஆயிரம் கோடிகள்தான் வரவில்லை என்று.. புதிய நோட்டு அச்சடித்த செலவைக்குக்குகூட கட்டுப்படியாகவில்லை பழைய நோட்டுக்களை ஓழித்த மோடி அரசின் நிர்வாக லட்சணம்.. கருப்பு பணம் ஒழியவில்லையே என நாடு முழுக்க கழுவி ஊற்றல் ஆரம்பமானபோது, அப்படியே டிஜிட்டல் வர்த்தகம் என்று வேறு டிராக்குக்கு மாறினார் மோடி..

ஏற்கனவே இப்படி பொருளாதார பர்னீச்சரை உடைத்த நிலையில்தான் வேறொரு பர்னீச்சர் எனற ஜிஎஸ்டியை கையில் எடுத்தார்கள்.. ஜிஎஸ்டி நல்ல விஷயம் என்றாலும் இடை வெளியே விடாமல் குத்தியதால் உள்நாட்டு உற்பத்தி அப்படியே படுத்துக்கொண்டது.. தொழில்துறை உற்பத்தி சரிவைகண்டு கதறுகிறது..

முன்னாள் பிரதமர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் என பலரும் மோடி நடவடிக்கையால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்கள்..மோடி கண்டுகொள்ளவேயில்லை..

சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரத்தை நாடிப்பிடித்துப்பார்த்த ஊடகங்கள், அபாய கட்டம் என்பதை சொல்ல ஆரம்பித்தன..

பாஜகவை சேர்ந்த சுப்ரமணியம் சுவாமி, ஆர்எஸ்எஸ் பாசறை ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களே மோடி அரசின் பொருளாதாரம் புஸ்ஸ் என்று சேம்சைடு கோல்போட்டார்கள்.. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த சின்ஹா, மோடி அரசில் பொருளாதாரப் பின்னைடைவு ஏற்பட்டுவிட்டது என்று பகிரங்கமாகவே இப்போது குற்றம்சாட்டுகிறார்.

தன்னிச்சையாக செயல்படும் மோடியை கேள்வி கேட்கமுடியாமல், பாதிப்புக்கெல்லாம் ஒட்டு போட முயற்சிக்கும் வேலையை மட்டுமே நிதியமைச்சர் அருண்ஜேட்லியால் முடிகிறது..அதிகபட்சம், 80 வயதில் வேலைதேடும் ஆசாமி என்று யஷ்வந்ந் சின்ஹாவை கிண்டலடிக்க மட்டுமே முடிகிறது..

பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த சில ஸ்பெஷல் பேக்கேஜ் திட்டங்களை கொண்டுவருவோம் என்கிறார் அருண்ஜேட்லி.. ஆக, பொருளாதாரம் இப்போதைக்கு மோசம் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

கடைசியில் பொருளாதார சிக்கலை களைவதற்கு கமிட்டு போடப்பட்டுள்ளது என்று படியிறங்க ஆரம்பித்துள்ளார் மோடி

ஆட்சி நிர்வாகம்தான் இப்படி அஷ்டகோணலில் சென்று மொத்தம் சரிந்துபோய்கிடக்கிறது என்று பார்த்தால், மோடியின் தற்போதைய அரசியலும் எதிர்கால அரசியலும் தள்ளாட்டமாகவே தெரிகிறது..

அத்வானி உள்ளிட்ட மூத்த அணியை குப்புறத்தள்ளிவிட்டு தனக்கென ஒரு டீமை அமைத்தார் ஆரம்பத்தில் மோடி. அமித்ஷா, ராஜ்நாத், வெங்கய்யாநாயுடு சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ் போன்றோர் மட்டுமே இந்த டீமில் இடம்பெற முடிந்தது..

ஆனால் எல்லா விஷயங்களையும் இவர்களுடன் மோடி கலந்து ஆலோசிக்கும் பழக்கம் வைத்திருக்கிறாரா என்றால், இல்லை என்றே சொல்கிறது டெல்லி வட்டாரம்.

கிட்டத்தட்ட ஒரு பேரரசர்போல் செயல்படும் மோடி, தனக்கு அடுத்து யாரும் உருவாகி விடக்கூடாது என்பதில் கில்லாடியாகவே இருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் ராம்மாதவ்வை தேசிய பொதுச்செயலாளராய் வெகு வேகமாய் கொண்டுவந்தார். அதே வேகத்தில் பாஜகவில் ராம்மாதவ் வளருகிறார் என்று தெரிந்ததும் உடனே அவர் டம்மியாக்கப்பட்டார்.

சலசலவென சவுண்ட் கொடுத்துக்கொண்டிருந்த வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து கழட்டப்பட்டு துணை ஜனாதிபதியாக்கப்பட்டு தீவிர அரசியலிலிருந்தே ஓரம்கட்டப்பட்டார்..

இப்போது ஓரம் கட்டப்படுபவர் அமித்ஷா. இரட்டையர்போல உலாவந்த மோடி-அமித் ஜோடி இடையே விரிசல் என்றே தெரிகிறது..

அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது அமித் ஷா உள்துறை அல்லது பாதுகாப்பு துறைக்கு பொறுப்பேற்பார் என அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது..ஆனால் அமித் ஷாவை மோடி தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளவேயில்லை. சென்ற ஆண்டுதான் முதன்முறையாக இணை அமைச்சர் பதவிக்கே வந்த நிர்மலா சீத்தாராமனை பாதுகாப்பு துறை அமைச்சராக்கினார் மோடி..சீனியர் அமைச்சர்களே அலறிப்போன மோடியின் தன்னிச்சையான நகர்த்தல் இது..

அன்று முதலே மோடியை விட்டு விலக ஆரம்பித்திருக்கிறது அமித் ஷா தரப்பு. கடந்த செப்டம்பர் 17 ந்தேதி மோடியின் பிறந்தநாள்..அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னதாக தகவலோ படமோ வெளியாகவில்லை..

மோடியும் அமித்ஷாவும் அரசியலில் புகுந்து விளையாடிது சொந்த மண்ணான குஜராத்தில்.. அப்படிப்பட்ட மண்ணுக்கு அண்மையில் கிடைத்த மிகப்பெரிய திட்டங்கள் இரண்டு.

ஒன்று, ஒரு லட்சம்கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அகமதாபாத்-புல்லட் ரயில் திட்டம்.. இரண்டாவது விஷயம்,  உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணையான நர்மதா சர்தார் சரோவர் அணை திறப்பு….

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவிருக்கும் குஜராத்திற்கு, பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று நிகழ்வுகளில் அமித்ஷா இல்லாதது தற்செயலாக அமைந்ததுபோல் தெரியவில்லை.. திட்டமிட்டே கட்டம் கட்டப்பட்டதுபோலவே தெரிகிறது.

கூட இருப்பவர்களை இப்படி மோடி வழக்கம்போல ஓரம் கட்டுகிறார் என்றால், இன்னொரு பக்கம் அவரை நம்பி வந்த அரசியல் கூட்டாளிகளும் பிய்த்துக்கொண்டு ஓட ஆரம்பித்திருக்கிறார்கள்..

மகாராஷ்ட்ரத்தில் இப்போது சிவசேனா, பாஜகவை தினசரி போட்டு தாக்கிக்கொண்டே இருக்கிறது..

குஜராத்தில் அண்மைக்காலமாக ரா‘ஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு அடிமை வேலைபார்த்த காங்கிரஸ் எக்ஸிஸ்ட் பார்ட்டியான சங்கர்சிங் வகேலாகூட மோடி பக்கம் போனால் கரைந்துபோய் விடுவோம் என்று தனிக்கட்சி என ஓடியே போய்விட்டார்…

பீகாரில் நம்பி வந்த முதலமைச்சர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சரவையில் தன் தரப்புக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் கடும் அதிருப்தியில் இருக்கிறார்..

இப்படி பல விஷயங்களை அலசினால், வலுவான எதிரிகள் இல்லாததால் உருவான நரேந்திர மோடி என்கிற பிம்பத்திற்கு, இனி ஏறுமுகம் கிடைக்குமா என்பது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகவே உருவாகிவருகிறது.. சர்வாதிகார தலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் தலைதூக்கியபடி வெளியேவரவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆட்சியை வைத்து இமேஜை சரிக்கட்டிவிடலாம் என்று மோடி நினைத்தால்,  அவர் உடைத்து போட்டதில் டேமேஜ் ஆகாத பர்னீச்சர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தேசத்தின் நிலைமை கிடைக்கிறது..