டில்லி
பொதுத் துறை வங்கிகளில் கடந்த சில வருடங்களாக வைப்பு நிதி முதலீடுகள் குறைந்து வருகின்றன.
வங்கிகளில் செய்யப்படும் முக்கிய முதலீடு வைப்பு நிதி ஆகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது குறைந்தது 6 மாதம் முதல் 10 வருடங்கள் வரை முதலீடாக வைக்கப்படும் தொகைக்கு வைப்பு நிதி எனப் பெயராகும். இந்த கால கட்டத்துக்கு இடையில் இந்த வைப்பு நிதியை எடுத்தால் வட்டி விகிதம் குறைவாகக் கிடைக்கும். காலம் முடியும் வரை முதலீட்டில் உள்ள தொகைகளுக்கு முழு வட்டியும் கிடைக்கும். பொதுவாக இந்த வைப்பு நிதிகளுக்கு மற்ற முதலீடுகளை விட அதிக வட்டி விகிதத்தை வங்கிகள் அளிக்கும்.
இந்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி கணக்கின்படி வங்கிகளில் மொத்த ரூ.77.32 லட்சம் கோடி வைப்பு நிதி முதலீடு உள்ளது. இதில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.51.34 லட்சம் கோடி அதாவது 66% முதலீடு செய்யப்பட்டுள்ளது. தனியார்த் துறை வங்கிகளில் ரூ.22.07 லட்சம் கோடி அதாவது 29% முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மிகவும் மாறுபட்ட அளவாகும். கடந்த 2010 ஆம் வருடம் பொதுத் துறை வங்கிகளில் 79% வைப்பு நிதியும் தனியார் வங்கிகளில் 16% வைப்பு நிதியும் இருந்தன.
வருட வாரியாக பார்க்கும் போது புதிய வைப்பு நிதிகளாகக் கடந்த 2018-19 ஆம் வருடம் மட்டும் ரூ.6.55 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தனியார் வங்கிகளில் ரூ.5.04 லட்சம் கோடி அதாவது 77% முதலீடு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துரை வங்கிகளில் 11% அதாவது ரூ.72113 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதே நிலை கடந்த 2013-14 ஆம் வருடங்களில் இருந்து உள்ளது. இதன் மூலம் கடந்த சில வருடங்களாகவே பொதுமக்கள் தனியார்த் துறை வங்கிகளில் அதிக முதலீடு செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சில பொதுத்துறை வங்கிகளுக்கு விதித்த கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் தொகைகளுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது என கூறப்படுகிறது. இதனால் பல வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய மக்கள் அஞ்சுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த 2013-14 ஆம் வருடம் மட்டுமே அதிக பட்சமாக ரூ.8.09 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. அதன் பிறகு குறையத் தொடங்கி உள்ளது.
அதே வேளையில் மக்கள் தங்கள் வைப்பு நிதியைத் தனியார் வங்கிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மார்ச் 2015 முதல் மார்ச் 2019 வரையிலான கால கட்டத்தில் தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட பொதுத்துறை வங்கிகளை விட 10 மடங்கு அதிக முதலீட்டைப் பெற்றுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார சரிவு அதிகரித்துள்ளது இதையொட்டி முதலீடுகளை அதிகரிக்க வைப்பு நிதிகளுக்கான வட்டியை பொதுத் துறை வங்கிகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் மக்கள் மத்தியில் பொதுத் துறை வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவே இந்த முதலீடுகள் தெரிவிக்கின்றன.