இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் (டிரம்ப் நிர்வாகம்) நிறைய போர்களை நிறுத்தினோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றோடொன்று தீவிரமாக மோதிக் கொண்டன.

இரண்டு பக்கத்தில் இருந்தும் குண்டுகள் மாறிமாறி பொழிந்தன, அங்கிருந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.

இவை இரண்டும் தீவிர அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று மோதிக் கொண்டிருந்தன.

இது ஒரு புதிய போர் வடிவமாகத் தெரிந்தது. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தபோது, அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் தகர்த்து, அதை முற்றிலுமாகத் தகர்த்துவிட்டோம்…

ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தன, அவை முன்னும் பின்னுமாக இருந்தன, அது பெரிதாகிக் கொண்டே இருந்தது, இதை வர்த்தகத்தின் மூலம் அதைத் தீர்த்துக் கொண்டோம்.

நாங்கள் சொன்னோம், நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள். அப்படியானால் போரை நிறுத்துங்கள் என்று இரண்டு நாடுகளுக்கும் உத்தரவிடப்பட்டது” என்று இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் கூறினார்.

டிரம்பின் இந்த பேச்சு இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவது உண்மையா ? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.