ஒரு மருத்துவரிடம் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக செல்வதாக வைத்துக்கொண்டால், அந்த மருத்துவர் பசியின்மைக்கான மாத்திரையைப் பரிந்துரை செய்தால் எவ்வளவு தவறான நடவடிக்கையோ, அப்படியானதுதான்
கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார் கட்டுரையாளர் வெங்கடேஸ்வர ராவ்.
மக்களின் நம்பிக்கையின்மை மற்றும் தேவை குறைபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய நேரத்தில், மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு பெரியளவில் வரிச்சலுகையை அறிவித்துள்ளதைத்தான் அவர் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
“மத்திய அரசின் செயலானது வழங்கல் தொடர்பான குறுக்கீடுகளே ஒழிய, அது தேவை தொடர்பான சவால்களை சரிசெய்வதல்ல. மத்திய அரசின் தற்போதை செயல் நடுத்தரத்தில் தொடங்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், அதுகுறித்து தற்போது கூறுவது முற்றிலும் சரியற்ற செயல்” என்று கூறியுள்ளார் இந்தியா ரேட்டிங்ஸ் முதன்மைப் பொருளாதார அறிஞரான தேவேந்திர குமார் பன்ட் என்று மேற்கோள் காட்டுகிறார் கட்டுரையாளர்.
வேலையிழப்பு மற்றும் நம்பிக்கையின்மை உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாங்கும் செயல்பாடுகள் குறைந்து வருகின்றன. வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட அதிக விலையுள்ள அம்சங்களை வாங்குவதை மக்கள் நிறுத்திவிட்டார்கள்.
மேலும், அன்றாடம் வாங்கக்கூடிய சாதாரண பொருட்களையும்கூட வாங்குவதைக் குறைத்துவிட்டார்கள். நிலைமை இப்படியிருக்கையில், அரசு கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய வரி சலுகையை செய்துள்ளது ஏன்? என்று விமர்சித்துள்ளார் கட்டுரையாளர்.