ராமண்ணா வியூவ்ஸ்
இன்று காலை திடுமென போன் செய்தாள் ஷோபி. எம்.இ. படித்துவிடடு, சொந்தமாக உணவகம் நடத்தும் வித்தியாசமான தோழி. கிட்டதட்ட “பப்” ஸ்டைலில் ஹைடெக்கான இருக்கும் அந்த உணவகம். மாடியிலேயே வீடு.
“இன்னைக்கு கடைக்கு லீவ்தான்… எனக்கும் அம்மாவுக்கும் மட்டும் சிம்பிளா சமைச்சிருக்கேன்.. ஃப்ரியா இருந்தா வாயேன்.. மதியம் சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என்றாள்.
சமையலில் அவள் ஒரு நளனி. (நளனின் பெண்பால்!). ஆனால் அவளைச் சந்திக்க நான் விரும்புவதற்குக் காரணம், அவளது வித்தியாசமான சிந்தனைகள்.
யாரும் சிந்திக்காத விதத்தில் யோசிப்பாள். பேசுவாள்.
மதியம் 12 மணிக்கெல்லாம் ஷோபி வீட்டில் இருந்தேன்.
“சிம்பிள்” என்று சொல்லியிருந்தாளே தவிர சிக்கன் ப்ரைட் ரைஸ், வெஜிடபுள் புலாவ்.. என்று வெரைட்டியாகவே செய்திருந்தாள்.
சாப்பிட்டுக்கொண்டே பேசினோம் அல்லது பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
இடையில் தேர்தல் குறித்து பேச்சுவர, பொறிந்துதள்ளிவிட்டாள் ஷோபி.
இடையில் எனக்கு பேசத்தோன்றவே இல்லை.
அவள் பேசியது இதுதான்:
“உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் நடக்கும் சம்பவங்கள் பெருமைப்படும் விதத்திலா இருக்கின்றன?
சாதி, மத, பிரச்சாரங்கள், அடிதடி கலாட்டா, வாக்களர்களுக்கு லஞ்சம்.. இப்படித்தான் செய்திகள் வருகின்றன.
இதே போல.. அல்லது இதைவிட மோசமான ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவில்லை.
தமழகத்தில் உள்ள வாக்காளர்களில் ஆண்கள் எண்ணிக்கை: 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 13 பேர். பெண்கள் எண்ணிக்கை: 2 கோடியே, 93 லட்சத்து 33 ஆயிரத்து 954 பேர்.
அதாவது ஆண் வாக்காளர்களைவிட, கொஞ்சம் அதிகமாகவே பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அப்படியானால் வேட்பாளர்களிலும் அப்படித்தானே இருக்க வேண்டும். போனால் போகிறது 50 சதவிகிதமாவது பெண் வேட்பாளர்கள் களத்தில் இருக்க வேண்டாமா.
ஆனால் இந்தத் தேர்தலில் ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 3776 பேர். பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 320 பேர்தான். அதாவது ஆண்களைவிட பத்து சதவிகிதத்துக்கும் குறைவு.
மக்கள் தொகையில், வாக்காளர்களில்… சரி பாதியைவிட சற்று அதிகமாகவே இருக்கும் பெண்களுக்கு உரிய பங்கு இந்தத் தேர்தலில் (இதற்கு முந்தைய தேர்தல்களிலும்) அளிக்கப்படுவதில்லை.
பிறகு எப்படி இது ஜனநாயம்.. மக்கள் ஆட்சி.. அமைவதற்கான தேர்தலாக இருக்கும்?
“பெண்கள் பயப்படுகிறார்கள்… அவர்களால் அரசியலில் ஈடுபடமுடியாது” என்றெல்லாம் பதில் வரும்.
சுதந்திரம் அடைந்து எழுபதாண்டை நெருங்கும் நேரத்திலும் பெண்களை இந்த நிலையில் வைத்திப்பதே அவமானம் இல்லையா?
அதுமட்டுமல்ல.. இன்றளவும் பெரும்பாலான பெண்கள், தங்களது தந்தை, சகோதரர், கணவர், மகன்.. இப்படி குடும்பத்து ஆண் மகன் சொல்லும் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
சமூகவலைதங்களில் பலரும் எழுதும் பதிவுகளில் இருந்தும் இதை தெரிந்துகொள்ளலாம்.
“பெண் ஒருவரை பிரதமராக கொண்டிருந்த நாடு, தற்போதும் சில மாநிலங்களில் பெண் முதல்வர்கள் இருக்கிறார்கள்..” என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டலாம்.
இவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்தானே..?
மற்றபடி இன்னமும் பெரும்பாலான பெண்களை் அரசியலில் ஈடுபட முடியாத நிலையிலும் வேட்பாளராக நிறுத்தப்படாத நிலையிலும், சுந்திரமாக வாக்களிக்க சிந்திக்க விடாத நிலையிலும் தானே இருக்கிறோம்…
ஆனால் வாக்குப்பதிவில் பெரும்பாலும் ஆண்களைவிட அதிகமாக பெண்களே பங்களிக்கிறார்கள். அதாவது, தங்களுக்கு தொடர்பில்லாத, உரிமை மறுக்கப்படுகிற தேர்தலில் வெறும் பொம்மைகளாக பங்கெடுக்கிறார்கள்.
இது எப்படி ஜனநாயக தேர்தல் ஆகும்?”
– மூச்சுவிடாமல் ஷோபி பேசி முடிக்க.. பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றேன் நான்.