ஜெருசலேம்
தொடர்ந்து 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராகப் பதவியில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு பதவியை இழக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது.
இஸ்ரேல் பிரதமராக நீண்டகாலமாக தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வருகிறார். இவருக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள், மோசைட் புகார்கள் நிலுவையில் உள்ளன. பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையொட்டி அவருடைய பதவி பறி போகும் நிலை ஏற்பட்டது.,
கடந்த 2 வருடங்களாக இஸ்ரேலில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் ஒருமுறை கூட நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை பெறாமல் இருந்தது. இஸ்ரேலில் எக்கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலை இருந்ததால் நெதன்யாகு காபந்து பிரதமராகத் தொடர்ந்து பதவியில் உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் மொத்தம் 120 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இறுதியாக நடந்த தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் அவருடைய கூட்டணி 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. இவருக்கு ஆதரவு அளிக்க எந்த எதிர்க்கட்சியும் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நடந்து முடிந்த இஸ்ரேல் – காசா மோதலால் அது நீட்டிக்கப்பட்டுள்ளது வரும் புதன்கிழமைக்குள் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இடது சாரி தலைவர் ஆதரவு அளித்துள்ளார். ஆகவே எதிர்க்கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி அரசு உருவாக உள்ளது. இதையொட்டி 12 வருடமாக ஆட்சி புரியும் நெதன்யாகுவின் ஆட்சி முடிவடைய உள்ளது. ஆனால் இதைத் தடுக்க நெதன்யாகு கடுமையாக முயன்று வருகிறார். இன்னும் 2 தினங்களில் இறுதி முடிவு வெளியாகக் கூடும்.