சென்னை:
ஓசூர் தொகுதி காலியா என்பது குறித்து தமிழக சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கூறி உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, 1998ம் ஆண்டு வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து ஓசூர் தொகுதி காலி என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக தேர்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சாஹு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் ரெடி என்று கூறினார்.
மேலும், ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றவர், தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர் அட்டை வழங்கி உள்ளதாகவும், புதிய வாக்காளர் அட்டை பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.