சென்னை:
விஜய் நடித்து வரும் 25ந்தேதி வெளியாக உள்ள பிகில் படத்தில் இந்துமதம் அவமதிக்கப்பட்டுள்ளதாக, சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் விஜய்யை சீண்டி மதரீதியிலாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜயின் சமீபகால படங்களில் அரசியல் நெடி வீசுவதைத் தொடர்ந்து, அவரது படம் மற்றும் அவரது நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சியினர், மத அமைப்புகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. அதுபோல அவரது ஒவ்வொரு படத்தின் கதையும் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி மீண்டு வருகிறது.
இந்த நிலையில், 25ந்தேதி வெளியாகும் அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் விஜயின் பிகில் படம் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் கதை, திருட்டுக்கதை என்று புகார்கள் எழுந்துள்ளன. உதவி இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பிகில் படத்தின் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர சென்னை உயர்நீதி மன்றம் உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில் பிகில்படத்திற்கு சிறப்பு காட்சி ஓட்ட தியேட்டர்களுக்கு தமிழகஅரசும் தடை விதித்து உள்ளது. இதற்கிடையில் பிகில்படத்தில் நடிகர் விஜய் காவிரி உடையுடன் சிலுவை அணிந்துகொண்டு நடித்திருப்பதாக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. நடிகர் விஜய் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக இந்துமதத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.