டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் கலந்துக் கொண்ட விவசாயிகளைச் சந்தித்த பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பாஜக அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.    விவசாயிகளின் போராட்டங்கள் நாடெங்கும் எழுந்தன.  டில்லியில் நாடெங்கும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தில் கலந்துக் கொள்ள வந்துள்ள விவசாயிகளை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் இங்கு முதல்வராக இங்கு வரவில்லை.  நான் விவசாயிகளுக்குச் சேவை செய்ய வந்துள்ளேன்.   விவசாயிகள் தங்கள் கடும் உழைப்பு மூலம் இவர்கள் உணவு அளித்து வருகின்றனர்.   அவர்களுக்கு இன்று கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.   நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த துயரைத் துடைக்கும் பணி உள்ளது.” எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகள் சந்திப்புக்குப் பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சௌரவ் பரத்வாஜ் தெரிவிக்கும் போது கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றி வேலிகள் இட்டு யாரும் உள்ளே செல்லவோ வீட்டில் உள்ளோர் வெளியே வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.  மேலும் வாசலில் பாஜகவினர் கூட்டமாகக் கூடி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டில்லி வடக்கு காவல்துறை தலைவர் அண்டோ அல்போன்ஸ், “டில்லி முதல்வர் வீட்டுக் காவலி8ல் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை.  அவர் தனது வீட்டினுள்ளும் வெளியிலும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்..  இதற்கு அத்தாட்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிடுகிறோம்” என மேலே காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.