திருப்பதி

திருப்பதி கோவிலிலை கைப்பற்ற மத்திய அரசின் தொல்லியல் துறை முயலுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகிலேயே மிகவும் வருமானம் உள்ள கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்றாகும்.  இந்த கோவிலின் நிர்வாகத்தை ஆந்திர மாநில அறநிலையத்துறை கவனித்து வருகிறது.    ஆந்திர அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு சொந்தமான பல கட்டிடங்களை உடைத்து மாற்றி அமைப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

கோவில்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளை பத்திரமாக வைக்கப்படவில்லை எனவும் பழங்கால மன்னர்கள் வழங்கிய நகைகள் உட்பட பல சொத்துக்கள் பாதுகாப்புடன் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன.    இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தற்போது மத்திய தொல்லியல் துறை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.  அந்தக் கடிதத்தில், பழங்கால சிறப்பு மிக்க கட்டிடங்களை மாற்றி அமைப்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.  அத்துடன் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலம் ஆகியவை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.   இதனால் திருப்பதி கோவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படலாம் எனவும் அதன் பின் கோவில் மத்ஹிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் எனவும் செய்திகள் பரவி உள்ளது.

இதற்கு ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துளது.   வேண்டுமென்றே ஆந்திர அரசின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி புகார் கூறி உள்ளது.   இதை ஆந்திர பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் மறுத்துள்ளார்.  தொன்மையான கட்டிடங்கள் எவை என்பதை தொல்லியல் துறை கேட்டறிவது வழக்கமான ஒன்றுதான் என அவர் கூறி உள்ளார்.