சென்னை:
கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் இடையே பேசுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரி நிர்வாகங்களை மிரட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசான் குற்றம் சாட்டி உள்ளார்.
மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும் சரமாரியாக குற்றம் கூறி வரும் நிலையில், இடையிடையே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி தனது கட்சியை வளர்த்து வருகிறார்.
தனது கட்சிக்கு இளைஞர்களை சேர்க்கும் வகையில், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளை தனது கட்சியில் இணைய வலியுறுத்தி வருகிறார். இதற்கு தமிழகஅரசு மறைமுகமாக கல்லூரி நிர்வாகத்தினரை எச்சரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, நமது விமானப்படை விமானியை பாகிஸ்தான் விடுவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். இதற்காக அண்டை நாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி பேச்சை தொடர்ந்து, நான் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுவதற்கு தமிழக அரசு தடை விதிக்கிறது என்றும், பல கல்லூரிகளுக்கு என்னை விருந்தினராக அனுமதிக்கக்கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி மிரட்டி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.