டெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி என அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு சபை அலுவலகங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. விதிகளி மீறி அன்னிய செலாவணி நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு. மனித உரிமைகளை பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அதன் பணியாகும். உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும், உலகில் பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு, மனித உரிமைகள் மதிக்கப்படாத இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், அம்னெஸ்டி அமைப்புக்கு சொந்தமான பெங்களூரு மற்றும் டெல்லி அலுவலகங்களில் சிபிஐ திடீர் சொதனை நடத்தியது. எப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (Foreign Contribution (Regulation) Act) மீறி ரூ .36 கோடி ரூபாய் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பெங்களூரில் மூன்று இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட், இங்கிலாந்தில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்திடமிருந்து நிதி பெறுவதில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (ஏ.ஐ.ஐ.பி.எல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.
51 கோடியே 72 லட்ச ரூபாய் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாகக் கூறி அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை தொடர்ந்து, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வருவாய்த் துறையின் குறிப்பில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வேறு சில அமைப்புகள், விதிகளை மீறி அம்னெஸ்டி இந்தியாவுக்கு நிதி அனுப்புவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “எப்போதெல்லாம் அம்னெஸ்டி இந்தியா அமைப்பு, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பற்றி குரல் எழுப்புகிறதோ, அப்போதெல்லாம் இதே போன்ற துன்புறுத்தல்கள், தொல்லை கொடுத்தல்கள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.