சென்னை: பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்  சர்ச்சையான நிலையில், இர்பான்மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசு,  இந்த வீடியோ எடுக்க உதவிய  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  ரூ.50ஆயிரம் அபராதத்துடன்,   10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதித்து உள்ளது.

அதேவேளையில்,  ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்; புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

சர்ச்சைக்குரிய யுடியூபர் அரசின் உத்தரவினை மீறி செயல்படுவது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே டிடிஎஃப் வாசன் இதுபோல செயல்பட்ட நிலையில், அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், இர்பான் மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது யுடியூபர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான்  மனைவி பிரசவத்துக்காக  சோழிங்க நல்லூர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு பிரசவம் நடைபெற்றது.  அப்போது, ஆபரேசன் தியேட்டரில் இர்பானும் கலந்துகொண்டு, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார்.  அதுதொடர்பான வீடியோவையும் யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் வெளியிட்டார்.

ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்த வீடியோ வைரலான நிலையில், இது சட்ட விரோதம் என  ஏராளமானோர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இர்பான்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், இந்த விவகாரம் நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில், இதுவரை இர்பான்மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கிடையில், சுகாதாரத்துறை சார்பில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு  கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.  இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது தடை இருந்தாலும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.