டில்லி:

பாலிதாரர்களின் தகவல்களை விதிகளை மீறி பகிர்ந்துகொண்டதாக பிரபல  பாலிசி பஜார் காப்பீடு நிறுவனத்திற்கு ஐஆர்டிஏஐ எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ( Insurance Regulatory Development Authority of India  – IRDAI) ரூ.1.11 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இணையதள காப்பீடு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருவது பாலிசி பஜார் காப்பீடு நிறுவனம். கடந்த 2008ம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 2.5 கோடி ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு பாலிசிகள் விற்பனை செய்துள்ளதாகவும். மாதத்திற்கு சராசரியாக 4 லட்சம் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்து வருவதாகவும் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், சிறப்பு சலுகைகளை வழங்கு வதாக அறிவித்து வரும் பாலிசி பஜார், அது தொடர்பான விளம்பரங்களில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

காப்பீட்டு நிறுவன விதிப்படி,  வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள கூடாது. ஆனால், பாலிசி பஜார் நிறுவனம், விதிகளை மீறி. பல வங்கிகளுக்கு தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை பதிந்தது மட்டுமின்றி. மொத்தம் எட்டு விதிமீறல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆராய்ந்து வந்த இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), பாலிசி பஜார் நிறுவனத்தின் விதி மீறலை கண்டறிந்ததுடன், அந்த நிறுவனத்துக்கு ரூ .1.11 கோடி அபராதம் விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்  அதிரடி உத்தரவு, காப்பீட்டுத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.