டெல்லி
ஐஆர்சிடிசி அயோத்தி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் செய்ய ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்துள்ளது.

ஐஆர்சிடிசி அதிகாரிகள்,
“அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அயோத்திக்கு வருகின்றனர். மேலும், மத மற்றும் கலாச்சார சுற்றுலாத்துறை மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, இது நாங்கள் நடத்தும் 5-வது ராமாயண சுற்றுப்பயணமாகும், மேலும் எங்கள் முந்தைய அனைத்து சுற்றுப்பயணங்களும் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன” என்று தெரிவித்தனர்.
இந்த சுற்றுலாத் திட்டத்தில் பங்கேற்கும் பயணிகள் 3-வது ஏசி வகுப்பில் செல்ல ரூ.1,17,975-ம், 2-வது ஏசி வகுப்பில் செல்ல ரூ.1,66,380-ம், முதல் வகுப்பு ஏசியில் செல்ல ரூ.1,79,515-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்தில் ரயில் டிக்கெட், 3 நட்சத்திர ஓட்டல்களில் தங்குதல், 3 வேளை உணவு (சைவம் மட்டும்), ரயிலில் இருந்து புனித்தலம் செல்வதற்கான வாகன வசதி, சுற்றுலாக் காப்பீடு, ஐஆர்சிடிசி சேவைகள் அனைத்தும் அடங்கும்.
இந்த ரயில் டெல்லி சப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 25-ம் தேதி புறப்படும். இந்தப் பயணத்துக்கு நவீன வசதிகள் அடங்கிய பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் பயன்படுத்தப்படும். முதலாவதாக அயோத்தி ராமர் கோயில் செல்லும் இந்த ரயில் அதன் பின்னர் மற்ற புனிதத் தலங்களை அடையும். 17 நாள் சுற்றுலா முடிந்த பின்னர் இறுதியாக டெல்லிக்கு இந்த ரயில் வந்தடையும்:
என அறிவித்துள்ளனர்