லக்னோ
ஈராக் மலையில் ராமர் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை ஒட்டி இந்தியக் குழு ஆராய உள்ளது.
ஈராக் நாட்டில் தர்பந்த் இ பெலுலா என்னும் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள பெலுலா என்னும் கணவாயில் பல சுவர் கல்வெட்டு சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் கி மு 2000 ஆண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது. இந்த சுவர் கல்வெட்டு சித்திரங்களில் காணப்படும் உருவங்கள் இந்த பகுதி அரசனுடையது என ஈராக் அரசு கூறி வருகிறது.
இந்த மலைகளில் உள்ள அரசர் உருவம் கொண்ட கல்வெட்டு சித்திரத்தில் ஒரு மேலாடை அணியாத அரசர் ஒரு வில்லை ஏந்தியபடி முதுகில் அம்புகளுடன் காணப்படுகிறார். அவர் முன்பு குரங்கின் முகத்துடன் ஒரு உருவம் கைகட்டி நிற்கிறது. அந்த அரசனின் இடையில் ஒரு சிறிய வாள் உள்ளது. இந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் அறிந்த அயோத்யா சோத் சன்ஸ்தான் என்னும் அமைப்பு இவை ராமர் காலத்து கல்வெட்டுக்கள் எனவும் அவை ராமர் மற்றும் அனுமனின் உருவம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு உத்திரப் பிரதேச கலாசாரம் குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய தூதர் பிரதீப் சிங் ராஜ்புரோகித் தலைமையில் ஒரு குழு கல்வெட்டு சித்திரங்களை ஆராய உள்ளது.
இந்த ஆய்வு குறித்து கோரிக்கை விடுத்த அயோத்யா சோத் சன்ஸ்தான் அமைப்பின் இயக்குனர் யோகேந்திர பிரதாப் சிங், “இந்த பெகுலா கணவாயில் ராமர் வசித்திருக்கலாம் என தோன்றுகிறது. இந்தியா மற்றும் மெசொபொடாமியா நாகரீகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை இந்த ஆய்வுக்கு பிறகு தெரிய வரும்.
ஈராக் நாட்டுக்கும் ராமருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என பலர் கூறி வரும் போதிலும் அது தவறு என நான் கருதுகிறேன். இண்ட ஆய்வின் மூலம் அந்த தொடர்பை கண்டறிய தீர்மானித்துள்ளோம். இதற்காக ஈராக் அரசின் அனுமதியை கோரி உள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.
இது சிந்து சமவெளி மற்றும் கீழ் மெசொபொடாமியா நாகரிகங்களுக்கு இடையில் உள்ள தொடர்பை அறிந்துக் கொள்ள செய்யப்படும் முதல் முயற்சி ஆகும். இங்கு கிமு 4500 முதல் கிமு 1900 ஆண்டுகள் வரை ஆண்ட சுமேரியர்கள் இந்தியாவில் இருந்து சென்றிருக்கலாம் எனவும் அதனால் இந்த இரு நாகரிகங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் எனவும் தோன்றுகிறது.
ராமரின் உருவங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும். இந்த உருவங்களின் மாதிரியை உருவாக்கி அயோத்தியில் இதை போல ஒரு கல்வெட்டு சித்திரம் வரையும் எண்ணம் எங்களுக்கு உள்ளது. அத்துடன் உலகில் உள்ள அத்தனை ராமர் உருவங்களின் மாதிரிகளையும் ஒரே இடத்தில் வைக்கவும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.