டெஹ்ரான்: சிறை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சுமார் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்கிறது ஈரான் அரசு.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்கம் ஈரானிலும் மோசமாக உள்ளது. அங்கே, ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று இருப்பதோடு, பலபேர் மாண்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கே 43 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம், அந்நாட்டில் மட்டும் மொத்தமாக 237 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,161 என்பதாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சிறை வளாகங்களில் கைதிகள் மொத்தமாக இருக்கும் சூழலில், அங்கே இந்த வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில், சுமார் 70,000 சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது அந்நாட்டு அரசு.
மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்றும், தேவையற்றப் பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டும், மார்ச் மாதம் நடைபெறவுள்ள நவ்ரூஸ் கொண்டாட்டங்களுக்காக, நாட்டின் வடபகுதியை நோக்கி மக்கள் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.